இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்த்திரங்கள் நடித்து, வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ‘அந்தகன்’.
பியானோ காதலரான க்ருஷ் (பிரசாந்த்) மக்களின் அங்கீகாரத்தை பெறவும், பணம் சம்பாதிக்கவும், தான் ஒரு பார்வையற்ற இசைக்கலைஞர் சிம்பதியை உருவாக்கி, ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான். ஒரு நாள் அவரின் திறமையை பார்த்த நடிகர் கார்த்திக், அவரை தன்னுடைய திருமண நாளன்று, தன் மனைவியான சிமியை சர்ப்ரைஸ் செய்ய வீட்டிற்கு வரச் சொல்கிறார். அதன் படி கிரிஷ்ஷூம் அங்கு செல்கிறான்.
ஆனால், அங்கு கள்ள உறவில் இருக்கும் சிமி, கார்த்திக்கை கொன்று விட்டு, இன்னொருவருடன் உல்லாசமாக இருக்கிறாள். இதனை க்ருஷ் பார்த்து விடுகிறான். க்ருஷ் பார்வை இல்லாதவன் தானே என்று அலட்சியமாக விட்டு விடும் சிமிக்கு ஒரு கட்டத்தில் அவனுக்கு பார்வை இருப்பது தெரிய வருகிறது. பிறகு என்ன நடந்தது என்பதே கதை…
சிமியாக, சிம்ரன். நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் முழுக்க, முழுக்க இரக்கமே இல்லாத வில்லியாகத்தோன்றி மிரட்டி இருக்கிறார். சமுத்திரக்கனிக்கு முதன் முறையாக மொத்தமாக வேறு மாதிரியான கதாபாத்திரம். ரசிக்க வைத்திருக்கிறார். வனிதாவும், கே எஸ் ரவிக்குமாரும், வழக்கம் போல, தன்னுடைய வில்லத்தனத்தில் காமெடி செய்து இருக்கிறார்கள். ஊர்வசியும், யோகி பாபுவும் கிடைத்த கொஞ்ச இடத்தில் காமெடி செய்ய முயற்சித்து இருக்கிறார்கள்.
இரண்டாம் பாதி கதை, சில இடங்களில் சோதிக்க வைக்கிறது. இசை ஒர்கவுட் ஆகவில்லை. காமெடி சுமார் தான். திரில்லர் காட்சிகளை மேலும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த ‘அந்தகன்’- அசால்ட் ஆனவன்