ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரபு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நல்லவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். இப்போது இருக்கும் எம்எல்ஏ மாதிரி திமிர் பிடித்தவர் இல்லை. இதுவரை அடிமையாக இருந்தீர்கள், இனிமேல் சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
இங்கு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர், தானாக எம்எல்ஏ ஆகவில்லை. அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்எல்ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று அம்மா பாணியைக் கடைப்பிடித்தோம்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டார். மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? சிந்து ரவிச்சந்திரனை பொட்டிகட்டி அனுப்பினார். மாவட்ட சேர்மன் ஒருவரும் இவரால் கட்சியை விட்டுப் போய்விட்டார். மரியாதை இல்லாத மனிதர்.
அனைவரது மனைவியும் கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது, கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு.
நான் அப்போது கீழேதான் இருந்தேன், ஜெயலலிதாவிடம் அவர்கள் பேசினார்கள். படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவர் பதவியை விட்டு இறக்கிவிட்டார். நகர, ஒன்றியச் செயலாளரோ, கட்சியினரோ புகார் அளிக்கவில்லை, அவரது மனைவி, மகன் புகார் அளித்தனர். அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பா போச்சு என்றார் ஜெயலலிதா.
இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை, இவரெல்லாம் மோசமான மனிதர் என்றார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா?
நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார், இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன், அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா?
அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு 66 ஆண்டு காலம் போராடுகிறீர்கள். விவசாயத்திற்கும் குடிக்கவும் நீர் வேண்டும். முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போதே கொண்டுவர நினைத்தார், நானும் ஒரு விவசாயி. அதனால் முழுக்க மாநில அரசு நிதியைக் கொண்டு 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றினோம், கரோனா காலத்தில் தடைபட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதற்கு விவசாய அமைப்புகள் கட்சி பாகுபாடு இல்லாமல், திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எல்லோரும் சேர்ந்து நன்றி செலுத்தினார்கள்.
அதற்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லை என்று சொல்லி இந்த தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் வர மறுத்துவிட்டார். இப்படி பொறாமை பிடித்த ஆள் தேவையா? யார் ஏற்பாடு..? எதிர்க்கட்சிகள் செய்கிறார்கள், அவருக்கு இருக்கும் உணர்வு கூட உங்களுக்கு இல்லையே? ஓட்டுப்போட்ட மக்கள் செழிக்கத்தான் இந்த திட்டம்.
நீங்கள் ஜெயலலிதாவை மதிப்பது உண்மையா…? இதை பாருங்கள், (போட்டோ காட்டுகிறார்) ஸ்டாலின், கருணாநிதி படம் இருக்கும் சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போதே பி டீமாக போய்விட்டார், திமுகவின் உளவாளி என்று கண்டுபிடித்தாகிவிட்டது. நீங்கள் சரியான ஆளில்லை, அதிமுக விசுவாசி இல்லை, குழிதோண்டிப் பறிக்கும் உளவாளி என்று கண்டுபிடித்துவிட்டோம்.
சட்டப்பேரவையில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்துப் பேசியது கிடையாது. இவரை வைத்திருக்கலாமா? இவர் மன்னிக்க முடியாத நபர். வாக்களித்த உங்களுக்கு அவர் விசுவாசமாக இல்லை. கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில் வைத்திருக்கிறார்..? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா..?
என் மீதும் கேஸ் போட்டனர், வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொன்னார்கள், ஆனால், நான் வழக்கை நடத்துவேன் என்று சொல்லி நடத்தி, நிரபராதி என்று உங்கள் முன்பு நிற்கிறேன். செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். அசிங்கமாகப் பேசினால், நாக்கு இருக்கிறது என்று பேசினால் சாலையில் நடக்க முடியாது. அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன்.
நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்து வைத்துவிட்டேன். நீங்கள் எப்படியும் அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் சேர்ந்து சதி செய்வீர்கள் என்று தெரியும். ஆட்சி மாறும், காட்சி மாறும், நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியும், யாராவது சவுண்ட் விட்டுப் பேசினால் கிட்டேயே போகமாட்டார்.
நான் அதிமுகவில், என் ஏரியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் 45 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்றேன். சட்டப்பேரவை தேர்தலில் 10வது முறை நின்றேன். 94 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன், இந்த தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன், நீங்கள் சவால் விட முடியுமா?
என் தொகுதி மக்கள், குடும்பத்தில் ஒருவனாக என்னைப் பார்க்கிறார்கள். எனக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள். என் மக்களை நீதிபதி அந்தஸ்தில் பார்க்கிறேன். நீங்கள் தொகுதி மக்களை அடிமையாகப் பார்க்கிறீர்கள். இனி ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவார்கள்.
ஒரு ஒன்றியச் செயலாளர் இப்போதுதான் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கிறேன் என்று சொன்னார். எப்படி கட்சியை வைத்திருக்கிறார் என்று பாருங்கள். மிகவும் மோசமான ஆள், பச்சையாகப் பேச ஆரம்பித்துவிடுவேன், எனது பதவி மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன்.
நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது. எனது முகம் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை. நான் எதுக்கும் துணிந்தவன். ஸ்டாலின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவன் நான். என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவரே தடுமாறுகிறார். ஸ்டாலினுக்கு நீங்கள் துணை போனது தெரிந்தும் நான் பக்கத்தில் வைத்திருந்தேன்.
நல்ல பண்பு இருக்கவேண்டும். வாய்க்கு வந்தமாதிரி பேசக்கூடாது. பல கோடி ரூபாய்க்கு எனக்கு மில் இருக்கிறதாம். அது என் சம்பந்தி ஃபேக்டரி. அதில் சண்டை உண்டாக்க வேண்டாம். அவர் 1997-ம் ஆண்டிலே கட்டி வைத்திருக்கிறார், இன்னொன்று என் மகனின் சகலை. அவர் 1996ம் ஆண்டு கட்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை.
30 ஏக்கரில் கதிர் காலேஜ் எப்படி வந்தது..? வயதுக்கு ஏத்த மாதிரி பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சுவரும். அவ்வளவு பணம் மிஞ்சியிருக்கிறது. ஆனால், ஒருத்தனுக்கும் ஒரு பைசா கொடுக்க மாட்டார். இவர் யாராவது ஒருத்தரையாவது கட்சியில் சேர்த்திருக்கிறாரா?
இவரால் வெளியேறியவர்கள்தான் அதிகம். முத்துசாமி, சிந்து ரவிச்சந்திரன், மாவட்டச் சேர்மன், தோப்பு வெங்கடாசலம் என்று பலரை வெளியேற்றினார். யாரையும் வளர விட மாட்டார். இந்த தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது, மக்களை உதாசீனப்படுத்தும் மனிதர் போட்டியிடுகிறார், அவருக்கு வாக்களிப்பீர்களா? 10 முறை நின்று என்ன செய்தார்?
புறவழிச்சாலை நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன், அவர் செய்யவில்லை. அதிமுக ஆட்சி வந்தால் கோபிச்செட்டிப்பாளையம் பிரமாண்ட பகுதியாக்குவேன், நான் சொன்னதைச் செய்வேன். அவர் பணக்காரரைப் பார்த்தால் பேசுவார், சாதாரண ஆட்களைப் பார்த்தால் பேச மாட்டார். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்பார். ஆனால், ஓட்டுப்போட்ட மக்கள், நிர்வாகிகள் பற்றி வாயைத் திறந்ததில்லை.
அரசியல் ரீதியாகப் பேசுவதை விட்டுவிட்டு தனிபட்ட முறையில் பேசினால் நிறைய இருக்கிறது, டிவியில் போட்டுவிடுவேன். பிறகு கோபியில் நடமாட முடியாது, காறித் துப்பிவிடுவார்கள். நான் முதல்வராக இருக்கும்போதே என்னவெல்லாம் செய்தீர்கள், அதுக்கு முன்பு என்னவெல்லாம் ஆட்டம் போட்டீர்கள் என்று அத்தனையும் இருக்கிறது. ஜாக்கிரதையா பேசுங்கள், அரசியல் ரீதியாகப் பேசுங்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்துப் பகுதியும் சேர்த்துக்கொள்ளப்படும். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். தேவையான திட்டம் நிறைவேற்றுவோம் எப்போதும் என்னை நேரில் வந்து பார்க்கலாம். அதிமுக வலிமையானது, கூட்டணி வலிமையானது” என்றார் பழனிசாமி.

















