சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் மீண்டும் ரூ. 55,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வார இறுதி நாளான சனிக்கிழமை வரை ஒரே வாரத்தில் ரூ. 1,480 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 54,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, சென்னையில் மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 6,880-க்கும், ஒரு சவரன் ரூ. 55,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் வரலாற்றில் முதல்முதலாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 55,000-ஐ கடந்தது. மத்திய நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைத்ததை தொடர்ந்து, தங்கத்தின் விலை ரூ. 3,000 வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் ஏறுமுகத்துக்கு சென்றுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளியின் விலையும் மீண்டும் ரூ. 100-ஐ நோக்கி சென்று கொண்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளி ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் 6 ரூபாய் உயர்ந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் ஒரு கிராம் கட்டி வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, ரூ. 98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.