இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யபட்டபோதும் இருவரையும் ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது.

இருவரையும் பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. க்ரு டிராகன் விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

இதனிடையே, தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஸ்டார் லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எப்போது பூமிக்கு திரும்பும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் நாள் குறித்து நாசா இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்வெளி வீரர்கள்-வீராங்கனைகள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி மாலை 6.04 மணிக்கு ஸ்டார் லைனர் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. சுமார் 6 மணி நேரம் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here