முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கு என்றாலும் அதற்கு இலங்கைத் தமிழர் விவகாரமே அடிப்படை. அந்த வகையில் தான் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் பலர் கைது செய்யப்பட்டாலும் ஆதரவாளர் என்ற வகையிலும் ராஜீவ்காந்தியை கொல்வதற்கான வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கான பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதற்காகவும் தான் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.
எதற்கு எனத் தெரியாமல் தான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்ற அவரின் வாக்குமூலம் மறைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் இதனை பல ஆண்டு காலத்திற்கு பின் ஒத்துக் கொண்டார். ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக பேரறிவாளன் விடுதலையை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி. இந்த விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டுடன் இருந்து வந்தன.
ஆனாலும், தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் பேரறிவாளன். 31 ஆண்டுகளுக்குப் பின் அதற்கான பலன் கிடைத்துள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இன்றைய நாள் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றால் மிகையல்ல. ஏனென்றால் இன்றுதான் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் ஈழத் தொப்புள் கொடி உறவுகள், கொத்து குண்டுகளுக்கு பலியான நாள்.
அந்த நினைவுநாளை உலகத் தமிழர்கள் துயரத்துடன்கடைப்பிடித்து வரும் நிலையில் இன்று பேரறிவாளன் விடுதலை என்ற மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. ஈழத் தமிழர்கள் மீதான பாசம்தான் பேரறிவாளனை விடுதலைப்புலிகளுக்கான ஆதரவாளராக மாற்றியது. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை யாரும் நியாயப்படுத்தவில்லை.ஆனால், பிழையாக கைது செய்யப்பட்டார் பேரறிவாளன் என்பதே அனைவரின் வாதமாக இருந்து வந்தது. இன்று அதற்கான நீதி கிடைத்துள்ளது. மே 18- மற்றொரு வகையிலும் தமிழன ஆர்வலர்களின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.