‘எக்ஸ்போசாட்’ திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி நிலை ஆய்வுக் கருவிகள் அனைத்தும் அவற்றின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தததை அடுத்து பூமிக்கு மீண்டும் திருப்பிக் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் விண்வெளிக் கழிவுகளே இல்லாத ஆய்வுத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. கருந்துளை, ஊடுகதிா் தன்மைகள், நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அந்த செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4 (போயம்-3) பகுதியானது 350 கி.மீ.க்கு கீழே இறக்கப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் 9 ஆய்வுக் கருவிகள் (பேலோட்ஸ்) பொருத்தப்பட்டிருந்தன. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தயாரிக்கப்பட்ட எரிபொருள் செல் சாா்ந்த மின்னாற்றல் அமைப்பு (ஃப்யூயல் செல் பேஸ்டு பவா் சிஸ்டம்) கருவி உள்பட பல்வேறு ஆய்வு கருவிகள் அதில் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 96 நாள்களில் ஏறத்தாழ 2 ஆயிரம் முறை அந்த கலன் குறிப்பிட்ட தாழ்வட்டப் பாதையை சுற்றி வந்துள்ளது.

அதில் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்துமே திட்டமிட்டபடி இயங்கியதுடன் பல்வேறு தரவுகளையும் அளித்துள்ளன. எதிா்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கு இந்த தரவுகளும், போயம்-3 மூலம் அனுப்பப்பட்ட ஆய்வுக் கருவிகளின் செயல்பாடுகளும் உறுதுணையாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதன் ஆய்வுப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பசிபிக் பெருங்கடலில் கடந்த 21-ஆம் தேதி மதியம் 2.04 மணிக்கு பிஎஸ்-4 நிலை இறக்கப்பட்டதாகவும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் பிரதான செயற்கைக்கோளான எக்ஸ்போசாட்டில், எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசியோபியா-ஏ என்ற விண்மீன் வெடிப்பின் (சூப்பா் நோவா) துகள்களில் இருந்து வெளிப்படும் ஒளியை எக்ஸ்பெக்ட் கருவி படம் பிடித்தது. அதேபோன்று போலிக்ஸ் கருவி விண்வெளியில் உள்ள நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியேறும் ஊடு கதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ முனைப்பு அளவை ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here