சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது முறைகேடானது என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பெரம்பூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வேட்பு மனுவில் முரண்பாடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என்று குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி என்று தெரிவித்துள்ளார். இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
தவிர, பெரம்பூரில் சொத்து மதிப்பை அவர் குறைத்துக் காட்டியது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தவறு. வேட்புமனுக்களில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள் முழுமையானதா, உண்மையானதா என்று விசாரணை நடத்த வருமான வரித் துறை மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது முறைகேடானது’’ என்று கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில் வருமான வரித் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

















