சாய் ராஜகோபால் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, வையாப்புரி, சந்தனபாரதி, சிங்கம் முத்து, மதுரை குமார், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் தான் ‘ஒத்த ஓட்டு முத்தையா’
விமர்சனம்
அரசியல்வாதியாக இருக்கும் முத்தையா ஒரு ஓட்டு வாங்கி தோற்றதால் அவருக்கு ஒத்த ஓட்டு முத்தையா என்ற பெயர் வருகிறது. விடாமல் மீண்டும் அரசியலில் களம் இறங்குகிறார் கவுண்டமணி. இது ஒருபுறம் இருக்க தன் மனைவியின் தங்கைக்கு ஒரு அவல நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தனது தங்கைகளுக்கு ஏற்படக் கூடாது என்று நினைத்து தனது மூன்று தங்கைகளுக்கும் மூன்று மகன்கள் உள்ள ஒரே குடும்பம் வேண்டுமென்று திருமண அமைப்பாளரிடம் கூறுகிறார் முத்தையா. பிறகு தங்கைகளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தது? மீண்டும் களம் இறங்கிய கவுண்டமணியை மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தார்களா? என்பதே கதை….
அரசியல்வாதியாக வரும் கவுண்டமணி மக்களின் மறதியையும், அரசியல்வாதிகளின் ஊழல் திறமைகளையும் மக்களுக்கு தன் நடிப்பின் மூலம் புரிய வைக்க முயற்சி எடுத்திருக்கிறார். வருங்கால வாக்காளர்களுக்கு எது முக்கியம் என்றும் தனது வாக்கின் மூலம் திறமைமிக்க தலைவரை எப்படி? தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் தனது கதையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அரசியல் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. நீண்ட வருடங்களுக்கு அப்புறம் கவுண்டமணியோட கவுண்ட்டர் காமெடி இந்த வயதிலும் மாறாமல் இருக்கிறது. மதுரை குமார் காமெடி சிரிக்க வைக்கிறது. நிறைய அரசியல் வசனங்கள் இருக்கும் இத்திரைப்படத்தில் அரசியல் காட்சி வரும் போது ஒரு சில அரசியல்வாதிகளின் நினைவுகள் நமக்கு வந்து போகிறது.
ஆனால் நிறைய நகைச்சுவை பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து இருந்தாலும் சிறந்த நகைச்சுவை எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நகைச்சுவை வசனங்களில் கூடுதல் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ அரசியல் சூதாட்டம்….
ராஜ் குமார் (சினிமா நிருபர்)