இயக்குநர் சுந்தர் சி – விஷால் கூட்டணியில் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விமர்சனம்:
சிறுவயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும்போது தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்னைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக, சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா இருவரும் ஒரே ஆளால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்ட விஷால் அதை தீர்க்க நினைக்கிறார். அவர்கள் என்ன பிரச்னையில் இருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து சரி செய்தாரா? என்பது தான் கதை….
சுந்தர்.சி தனது வழக்கமான டெம்ப்ளேட்களை கொண்டே ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம். முதலில் இந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிருக்க வேண்டிய ஒன்று என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பது அவசியம். அந்த காலகட்டத்தில் வெளியான படங்களில் இடம்பெற்றிருந்த சிறுபிள்ளைத்தனமான காமெடி, இரண்டு ஹீரோயின்கள், அவர்களுக்கு தனித்தனியே இரண்டு ’கவர்ச்சி’ பாடல்கள், அவர்களை வைத்து இரட்டை அர்த்த வசனங்கள் அனைத்தும் இதிலும் உள்ளன.
மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு, சீனு மோகன் என மறைந்த நடிகர்கள் பலரையும் பெரிய திரையில் மீண்டும் பார்ப்பது நெகிழ்வை தந்தது. குறிப்பாக மணிவண்ணன், மனோபாலா இருவரும் வரும் காட்சிகள் சிறப்பு. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னால் மனோபாலாவின் பிணத்தை வைத்துக் கொண்டு விஷாலும், சந்தானமும் செய்யும் அலப்பறைகள் அதிரடி சரவெடி ரகம். அந்த நீண்ட காட்சி முழுவதுமே அரங்கில் ஓயாத சிரிப்பலை. படத்தின் வெற்றிக்கு இந்த காட்சியே முக்கிய பங்காக இருக்கும்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களில் ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’ பாடல் ரசிக்க வைக்கிறது. விஷால் குரலில் ஏற்கெனவே ஹிட் ஆன ‘மை டியர் லவ்வரு’ பாடல் வரும் இடத்தில் அரங்கம் அதிர்கிறது.
அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்ப்பதால் கவர்ச்சி காட்சிகளை குறைத்திருக்கலாம் என பார்வையாளர்கள் கருத்து…..
மொத்தத்தில் இந்த ‘மத கஜ ராஜா’ – சிரிப்பு மழை
RAJKUMAR- CINEMA REPORTER