கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைப்பதியில் 11 நாட்கள் நடைபெறும் தை திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், அதிகாலை அய்யாவுக்கு பணிவிடை, கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் லைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மதியம் வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதலும் நடந்தது. 2ம் நாளான நாளை இரவு அய்யா மயில்வாகனத்தில் பவனி வருதல் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
வரும் 24-ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.
9ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் திருவிழாவான 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11ம் திருவிழாவான 27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கமும்நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.