வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் இன்று (பிப். 1) காலை 6 மணியளவில் நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும், காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை (பிப். 2) காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.
வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-வது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜன.31) காலை தொடங்கியது. தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, நேற்று காலை 7.30 மணியளவில் தருமசாலையிலும், மருதூர் மற்றும் நற்கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது.
ஞானசபையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளலார் திருவுருவப் படம், சன்மார்க்க கொடி, அவர் பயன்படுத்திப் பொருட்கள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை திரை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 3-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. தைப்பூசத்தையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். வடலூரே அதிர்ந்து போனது!!

















