திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், தேன், இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. ஆடிப்பூர விழாவையொட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் திருத்தணியில் உள்ள தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கி இருந்தனர்.

பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உடல் முழுவதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணபொய்கையில் புனித நீராடினர். பின் மலைப்படிகள் வழியாக சென்று மூலவரை தரிசித்தனர். மேலும் சில பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனர்.

காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடிப்பூர விழாவில் கலந்துகொள்ள சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் பொதுவழியில் மூலவரை தரிசிக்க 4 மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு வழி கட்டணத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here