தூத்துக்குடியைச் சேர்ந்த புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்துவரும் சிறுவன் சிவணைந்தன் படிப்பில் கெட்டிக்காரன். என்ன சேட்டைகள் செய்தாலும், ஊரெல்லாம் திரிந்தாலும் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். ஆனால், வறுமையான குடும்பம். வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்க உடன் அழைத்துச் செல்லப்படுகிறான்.
20 கிலோ எடையுள்ள தார்களை சிறுவன் சுமப்பதும், அதனால் உடல்வலியால் அழுவதுமாக அந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் பாரம் கடத்தப்படுகிறது. வாழைத்தார் சுமப்பதிலிருந்து ஒருநாள் விலக்கு கிடைத்தாலும் சிறுவர்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் இருக்கிறது.
ஒருபக்கம், சிவணைந்தனின் ஏழ்மையும், வேறு வழியில்லாமல் வாழைத்தார் பணியும்… மறுபுறம் அவன் விரும்பும் பள்ளிக்கூடமும் அங்கு அவனைக் கவர்ந்த ஆசிரியை பூங்கொடியும் (நிகிலா விமல்). ஆசிரியையின் பெயரை நோட்டில் எழுதிவைப்பதும், அவர் வகுப்பைக் கடந்து செல்லும்போதெல்லாம் கதாநாயகியைப் பார்ப்பதுபோல் வியப்பதுமாக இருக்கிறான். அவனின் நெருங்கிய நண்பன் சேகருடன் சேர்ந்து பூங்கொடியைப் பார்த்து ரசிப்பது, பாடல் பாடுவது என பள்ளிக்காலத்தில் நமக்கு அப்படியிருந்த ஆசிரியைகள் எல்லாரும் நினைவுக்கு வருகின்றனர்.
அதே ஊரில் வாழைத்தார் சுமக்கச் செல்லும் கனி (கலையரசன்) சம்பள உயர்வு கேட்டு தன் ஆள்களைத் திரட்டுகிறான். ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல் முதலாளி ஒப்புக்கொள்கிறார். இந்த உயர்வைக் காரணம் காட்டி வேறு ஒரு வகையில், அந்த மக்களை பெரும் ஆபத்தில் சிக்க வைக்கிறார் முதலாளி. பிறகு என்ன நடந்தது என்பதே சோகம் கலந்த உண்மை கதை.
இரண்டு சிறுவர்களின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் வசனம், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கைக்குட்டை காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. கிளைமேக்ஸ் காட்சி கண் கலங்கி உருக வைத்து விட்டது. சிறந்த உண்மை படைப்பை காதல், நகைச்சுவை, வறுமை, சோகம் என அருமையாக சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
புத்தகத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை காட்டிய நம்ம மாரி செல்வராஜ் ஏன்? காமராஜர் அய்யா புகைப்படத்தை காட்டவில்லை என அனைவருக்கும் தோனுகிறது.
வாழை- உண்மையான மன உருக்கம்