ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி – நவீன் ராஜன் தயாரிப்பில் பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா உள்ளிட்டோர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் தான் ‘தி டோர்’
விமர்சனம்:
கதாநாயகியான பாவனா ஆர்கிடெக்காக பணிபுரிகிறார். தனது தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட அவர் தனியாக ஒரு வீட்டில் குடியேறுகிறார். அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு பெண் குடி இருக்கிறார். அவருடன் இணைந்து இவரும் அந்த வீட்டில் தங்க சம்மதிக்கிறார். அந்த வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகிறார் அந்த பெண் அதுபோல பாவனாவுக்கும் அதே நிகழ்வு நடக்கிறது. அது என்னவென்று அறிய தன் தோழியுடன் இணைந்து அந்த அமானுஷ்ய விஷயங்களை பற்றி அறிய நண்பர்களை தொடர்பு கொள்கிறார்கள். அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து பாவனா அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பதே மீதி கதை..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். கதை ஒரு பேய் கதைக்களத்தைச் சுற்றி சுழல்கிறது, சஸ்பென்ஸ் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் கூறுகளை கலக்கிறது. படத்தில் குளிர்ச்சியான சூழலை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் கேமரா மேன். படத்தின் பின்னணி இசை திகில் ஊட்டும் காட்சிகளுடன் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆவிகளுடன் நேருக்கு நேர் நடத்தும் பைரி வினு ஆவியைப் பார்க்கும் கட்டங்களில் பேய் முழி முழித்து உண்மையிலேயே பேயைப் பார்த்ததைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அமானுஷ்ய படமாக இருந்தாலும் படத்தின் நேர்த்தியில் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள் ஒளிப்பதிவாளர் கவுதமும், இசையமைப்பாளர் வருண் உன்னியும். பேய் பயமெல்லாம் படத்தில் ஒன்னும் இல்லை.
ஆவி பனிக்கட்டியாக உறைய வைத்து சாவடிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது…. கிளைமேக்ஸ் விசாரணை தெளிவாக இல்லை என்றே சொல்லலாம்….
மொத்தத்தில் இந்த ‘தி டோர்’ சாவி இல்லாத கதவு……
ராஜ் குமார்- சினிமா நிருபர்