அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி, நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் ‘சொர்க்கவாசல்’ இந்த படம் இன்று நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் கரு: தனி மனிதன் சிறைச்சாலையில் எதிர்கொள்ளும் துன்பங்கள்
நாயகன் ஆர்.ஜே பாலாஜி குடும்பத்துடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து குடும்பம் நடத்துகிறார். எதிர்பாராத விதமாக அவர் சிறைச்சாலைக்கு செல்ல நேர்கிறது. பிறகு சிறைச்சாலையில் இருக்கும் ரவுடிகளுக்கும் இவருக்கும் சண்டை ஆரம்பிக்கிறது. சிறைச்சாலைக்குள் கலவரம் வெடிக்கிறது. சிறையில் மூன்று அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். எப்படா வெளியே போவோம் என கதறுகிறார் நாயகன். மற்றொரு புறம் ஆர்.ஜே பாலாஜி யின் அம்மாவும் நாயகியும் கலங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் சிறைச்சாலையில் ஆர்.ஜே பாலாஜியை உணவு தயாரிக்கும் விடுதிக்கு சிறை காவல் அதிகாரிகள் மாற்றுகிறார்கள். சிறை கண்காணிப்பாளர் தனக்கு சாதகமாக, சிறையில் இருக்கும் ஒரு ரவுடிக்கு ஒரு பவுடர் பாக்கெட் கொடுத்து இதை உணவில் கலக்குமாறு கட்டளையிடுகிறார். இதை செய்தால் உன்னை நானே வழக்கறிஞர் வைத்து விடுவித்து உன் குடும்பத்துடன் வாழ வழி செய்கிறேன் என SP கூறுகிறார். பிறகு அந்த ரவுடிக்கு என்ன ஆனது? நாயகன் சிறையிலிருந்து வெளியில் வந்து தன் குடும்பத்தினருடன் சேருகிறாரா? இல்லையா? என்பதே கதை.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி யின் எதார்த்த நடிப்பு அமர வைக்கிறது. கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசை ஓகே. சிறை காவலராக கருணாஸ் நடிப்பு பார்க்க வைக்கிறது. விசாரணை அதிகாரியாக நட்டி தனக்கு கொடுத்த பணியை செய்திருக்கிறார். நடிகை சானியா ஐயப்பன் என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். படம் விறுவிறுப்பாக செல்கிறது. சில காட்சிகளில் இரத்தம், கொலை என சலிப்பை ஏற்படுத்துகிறது.
சிறையில் தீ பற்ற வைத்து சண்டை போடுவது.. சிறை காவலர்களை உள்ளேயே கொலை செய்வது… சிறை வாசிகள் சிறையை தன்வசம் ஆக்கி கலவரம் செய்வது லாஜிக் மீறல்கள் என்றே சொல்லலாம்.
இந்த ‘சொர்க்கவாசல்’- சிறை வாழ்க்கையின் வலி…..
ராஜ்குமார்- சினிமா நிருபர்