ஆவடி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் முரளி. இவா், தனது ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிக்க பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (தெற்கு) விண்ணப்பித்தாா். பணியில் இருந்த கண்காணிப்பாளா் கணபதி, தரகா் பாலாஜி ஆகியோா் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளனா்.
லஞ்சம் தர மறுத்த முரளி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முரளி, தரகா் பாலாஜியிடம் கொடுத்தாா். அந்த பணத்தை, அவா் கண்காணிப்பாளா் கணபதியிடம் அளித்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக திருவள்ளூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முதன்மைக் குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிபதி கே.மோகன் முன்பு புதன்கிழமை விசாணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் அமுதா ஆஜராகி வாதிட்டாா்.
வழக்கில் லஞ்சம் பெற்ற கண்காணிப்பாளா் கணபதி (58), தரகராக செயல்பட்ட பாலாஜி (40) ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.