கொரோனா தொற்று பரவல் தடுப்புக்கான ஊரடங்கை, வரும் 14ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பாதிப்பு அதிகமுள்ள மற்ற இடங்களில், முழு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளை காலை, 6:00 மணிக்குமுடிவுக்கு வருகிறது.

இந்த ஊரடங்கிற்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது; நோய் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து முடிவு செய்ய, மருத்துவ நிபுணர்களுடன், அரசு ஆலோசனை நடத்தியது.இதைத் தொடர்ந்து, நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் உயிர்களை காக்கவும், முழு ஊரடங்கை நாளை முதல், 14ம் தேதி காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

கொரோனா தொற்று பரவல், பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய, 11 மாவட்டங்களில் மட்டும், தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது.
எனவே, இந்த மாவட்டங்களில், தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் வேண்டும். எனவே, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், இந்த 11 மாவட்டங்களில், சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும், கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன் விபரம்:
* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்கும் கடைகள் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்கும் நடைபாதை கடைகள் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்

* இறைச்சி கூடங்கள், மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

                     பத்திரப்பதிவு அனுமதி

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்; சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு, 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்

* தீப்பெட்டி தொழிற்சாலைகள், 50 சதவீதம் பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

நோய் பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர, இதர மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன், கூடுதல் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.

                            அவற்றின் விபரம்:

* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்
* மீன் சந்தைகள், மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

* இறைச்சி கூடங்கள், மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள், 50 சதவீதம் பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்; சார் – பதிவாளர் அலுவலகங்களில், ஒரு நாளைக்கு, 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

                             ‘இ – பதிவு’ அவசியம்

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள், ‘இ- – பதிவு’டன் அனுமதிக்கப்படும்

* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்களை பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை, இ — பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்

* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்

* மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும், காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படும்; விற்பனை நிலையங்களுக்கு அனுமதி கிடையாது

* ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

* வாகன வினியோகிப்பாளர்களின் வாகன பழுது பார்க்கும் மையங்கள் மட்டும், காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்

* வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணியர், இ- – பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். வாடகை டாக்சிகளில், டிரைவர் தவிர மூன்று பயணியர்; ஆட்டோக்களில் டிரைவர் தவிர, இரண்டு பயணியர் மட்டும் பயணிக்கலாம்.

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு, அவசர காரணங்களுக்காக பயணிக்க, தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து, ‘இ — பாஸ்’ பெற்று பயணிக்கலாம்

* கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. இவை, ஏற்றுமதி ஆணைகள் வைத்திருந்தால், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்ப மட்டும், 10 சதவீத பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படஅனுமதிக்கப்படும்

* நடமாடும் வாகனங்கள் வழியே, பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் போன்றவை விற்பனை செய்யும் அரசின் திட்டம், பொதுமக்கள் வரவேற்பை பெற்றுள்ளதால், தொடர்ந்து செயல்படுத்தப்படும்

* பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டும். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், கடைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

               ‘டாஸ்மாக்’ கடை திறப்பு இல்லை

கொரோனா பரவல் தடுக்க அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை முன்னிட்டு, மே 10ம் தேதி முதல், இம்மாதம் 7ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், முழு ஊரடங்கு, 14ம் தேதி வரை, சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதில், மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை, காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், மதுக் கடைகளும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, ‘குடி’மகன்களிடம் காணப்பட்டது.ஆனால், ‘தளர்வுகள் வழங்கப்பட்டாலும், மதுக் கடைகளை திறப்பது குறித்து, அரசிடம் இருந்து எந்த தகவலும் வராததால், முழு ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படும் வரை மதுக் கடைகள் திறக்கப்படாது’ என, டாஸ்மாக் அதிகாரிகள்
தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here