தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
முருகானந்தம் ஐஏஎஸ் மாற்றம்:
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை இன்று தேர்தல் ஆணையம் மாற்றியது.
புதிய தலைமைச் செயலாளர்:
இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டு, அவர் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்:
தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. மாற்றத்திற்கு, “நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல் சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் – சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து” எனத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சாய்குமார்?
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். கேடரின் 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமார், தமிழ்நாடு மின்சார வாரியம், செய்தித்தாள் காகித நிறுவனம், முதல்வரின் செயலாளர் (நிலை 1) உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றியவர்.
எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளர்:
தமிழ்நாடு தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரின் தனிச் செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

















