Monday, May 6, 2024
Blog

சவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்து!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஐபிசி பிரிவுகள் 294(பி), 509, 353 ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை நேற்று (மே.4) அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர்.

இதையடுத்து, தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தாராபுரம் ஐடிஐ சந்திப்பு அருகே காவல்துறை வாகனம் மீது, அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தாராபுரம் மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே7ஆம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை இ-பாஸ்!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனின் நிலவி வருகிறது. இச்சமயங்களில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அதனை தடுக்கும் வகையில் வரும் மே7ஆம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இ-பஸ் பதிவு செய்த பின்னே மாவட்டத்திற்குள் வர வேண்டும் எனவும், வாகனத்தில் வரும் எத்தனை நபர்கள் என்று இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த இணையதளம் மூலம் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்த எந்தவிதமான தடையும் இல்லை எனவும், முறையாக இ-பாஸ் பெற்று வரும் அனைத்து வாகனங்களும் நீலகிரிக்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒப்புதல் தர லஞ்சம் கேட்ட 2 நீர்வளத்துறை அதிகாரிகள்!

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், 32 ஏற்றுமதி தொழில் செய்பவர். தபால்தந்தி நகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன், 47, ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகினார்.

அவர்கள் ஒப்புதல் தர, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். முன்பணமாக, 1 லட்சம் ரூபாய் கேட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலனிடம் சபீர் காசிம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரை படி,  தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாயகிருஷ்ணன், தியாக ராஜனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சத்தை சபீர் காசிம் வழங்கினார். அப்போது, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கில்லாடிகள்! நடந்தது என்ன?!

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள் பட்டியை சேர்ந்தவர் தொழிலதிபர் நித்தியானந்தம் (47). இவர் காற்றாலைகளுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருந்துள்ளதாக நித்தியானந்ததின் நண்பர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அக்கும்பலிடம் இருந்து நித்தியானந்தத்தை மீட்டு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, நெல்லை பெருமாள் வரும் என் ஜிஓ காலனி சேர்ந்த பானுமதி(40) என்ற பெண் முகநூல் மூலம் நித்தியானந்தத்திடம் பழகி வந்துள்ளார். பின்னர், ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருக்கலாம் வாங்க என நெல்லைக்கு வரும்படி அழைத்துள்ளார். பானுமதியின் பேச்சை நம்பி நெல்லைக்கு வந்த நித்தியானந்தம் பெருமாள்புரம் பகுதிதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து பானுமதியை தனியாக சந்தித்துள்ளார்.

திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அப்பெண் தன்னை ஏமாற்றியுள்ளார் என நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது. பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை ஐந்து பேரும் சேர்ந்து கத்தி முனையில் நித்தியானந்தம் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை பறித்ததோடு ஏடிஎம் கார்டில் இருந்து 60,000 ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையில் 75,000 என ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து காசோலையில் கையெழுத்து வாங்கி 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தரும்படி வங்கி ஒன்றிற்கு நித்தியானந்தத்தை அக்கும்பல் அழைத்து சென்றுள்ளது. பணம் தரவில்லை என்றால் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்து விடுவேன் என்று பானுமதி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு ஒப்பு கொண்டு இவர், தனது பணத்தை இழந்தநிலையில், தனது நண்பரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி முப்பது நிமிடத்திற்குள் பானுமதி மற்றும் அக்கும்பலை சுற்றி வளைத்து நித்தியானந்தத்தை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி இது போன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் அரசு ஊழியர்கள் தொழிலதிபர்கள் என பல்வேறு நபர்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை பறித்தது தெரியவந்துள்ளது.

அரண்மனை 4 திரைவிமர்சனம்: பேய் படமா இது?! RATING 2.9/5

சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் அறிந்துகொள்ள உறவினர் கோவை சரளாவுடன் கிராமத்துக்கு வருகிறார் சுந்தர் சி. அந்த பங்களாவில் செட் பிராப்பர்ட்டியாக விடிவி கணேஷும், யோகி பாபுவும் இருக்கிறார்கள்.

அந்த அரண்மனையின் சொந்தக்காரர் டெல்லி கணேஷ். அவரின் பேத்தி ராஷி கண்ணா. அந்த அரண்மனையின் இன்னொரு செட் பிராப்பர்ட்டி சேசு. கேமியோ செட் பிராப்பர்ட்டியாக மொட்டை ராஜேந்திரன். இவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள். அந்த ஊரில் இருப்பது என்ன மாதிரியான பேய். அந்த பேயின் பூர்வீகம் என்ன? தங்கை, தங்கை கணவர் மரணத்துக்கு யார் காரணம்?  ஏன் இந்தக் கொலைகள்? என்பதே மீதி கதை….

ஹன்சிகா, ஆண்டிரியா, லட்சுமி ராய், த்ரிஷா, ராஷி கண்ணா என சுந்தர் சியின் பேய் நாயகிகளில் தமன்னா புது வரவு. தமன்னா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை ஓகே. கிளைமேக்ஸ் சிம்ரன் குஷ்பு சாமி குத்து பாடல் அனைவரையும் பார்க்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். 

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் இல்லவே இல்லை. கோவை சரளாவை பேய் படத்தில் பார்த்து பார்த்து சலுத்துவிட்டதப்பா…. காமெடி எல்லாம் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. அரைத்த மாவையே அரைத்து வச்சது போல இந்த பேய் கதை இருக்கு. சுந்தர் சி அவர்களே பேய் கதையை இனிமேல் மாத்துங்க அய்யா முடியல…. என ரசிகர்கள் குமுறல், மீண்டும் உங்கள் கதையில் காமெடிக்கு முக்கியத்தும் கொடுங்கள்.

அரண்மனை 4 – பேய் அடி   

 

சிக்கன் ரைசில் விஷம் கலந்து கொடுத்த பாசகார பேரன்… 2 உயிர் போச்சே….!

நாமக்கல், எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 67. இவரது பேரன் பகவதி 20, ஏப்ரல் 30ம் தேதி கொசவம்பட்டி வீட்டில் இருந்த தாய் நதியா (40),வுக்கும் சண்முகத்திற்கும் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தார். இருவருக்கும் வயிற்று வலி, வாந்தி வரத்தொடங்கியது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று( மே 02) இரவு சண்முகம் இறந்தார்.

நதியா, சண்முகம் சாப்பிட்டு வைத்த மீதி உணவு சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அதேசமயம் பகவதி, ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பகவதி வாங்கி சென்ற உணவில், எவ்வாறு விஷம் கலந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். பகவதி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என பகவதி ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் போலீசாரிடம்:

2 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தேன். அதனை தாயாரும், தாத்தாவும் ஏற்கவில்லை. இதனால், இரண்டு குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. தாயார் நதியாவும் என்னிடம் பாசமாக இல்லை. ஒரு பெண்ணுடன் உள்ள தவறான பழக்கம், ஆபாச படங்களை பார்ப்பது குறித்து தாத்தாவும், தாயாரும் கண்டித்தனர். இதனால், விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி, 30ம் தேதி சிக்கன் ரைசில் கலந்து கொடுத்தேன். அதனை இருவர் மட்டுமே சாப்பிட்டனர். மற்றவர்கள் சாப்பிடவில்லை” என கூறினார்.

இதனையடுத்து பகவதியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.

ரத்னம் திரைவிமர்சனம்: இயக்குனர் ஹரி இப்படி செய்யலாமா ?! RATING 2.5/5

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது ரத்னம். 

சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும்  சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார்.

நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “கொள்கைக்காக தான் கொலையே செய்வேன்” என்ற மனநிலையில் தான் இருக்கின்றார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார். தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது. இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் வாசுதேவ் மேனன் என்ட்ரி எல்லாம் சரி தான் ஆனால் ஒரு உயர் அதிகாரி இப்படி அசிங்கமான வார்த்தையால் திட்டுவாரா? என்று சிந்திக்க வைத்துவிட்டது.  இசை காது வலிக்குதுப்பா….. ஒளிப்பதிவு ஓகே. முரளிசர்மாவின் வில்லன் நடிப்பு எப்படி என்றால் பவுடர் அடிப்பது, நெத்தியால் முட்டுவது, டவுசரோடு சுத்துவது…. அம்மா கதை ஒரு பக்கம், அப்பா கதை ஒரு பக்கம், பிரியா பவானி சங்கர் கதை ஒரு பக்கம் என கதையே புரியாமல் ரசிகர்கள் குலம்பிவிட்டனர். படம் முழுக்க வரும் வெட்டு, குத்து, ரத்தம் என ஒரு கட்டத்தில் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்றே சொல்லலாம். 

ஹரி படம் என்றாலே விறுவிறுப்பு, காதல், செண்டிமெண்ட் எல்லாம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆனால் இந்த படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இனி மேல் ஹரி அவர்கள் கதையை சரியான முறையில் தேர்வு செய்து இயக்கினால் நல்லது…. இல்லைஎன்றால்………….?

இந்த “ரத்னம்”- செம அடி    

வேலூரில் ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு!

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், பாலேகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கலையரசி. இந்நிலையில், பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் வேலூர் லஞ்சஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 2011 ஏப். 1-ம் தேதி முதல் 2017 மே 31-ம்தேதி வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.20.44 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரபு, கலையரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் வழக்கு பதிவு செய்தார். மேலும், திருவலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பிரபுவின் வீட்டில் இருந்து வங்கிக் கணக்குபுத்தகங்கள், பல்வேறு சொத்துகள் தொடர்பான ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ 5 லட்சம் லஞ்சம்: காவல் ஆய்வாளர் கைது!

வழக்கில் விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஹரியாணாவின் காவல் ஆய்வாளா் மற்றும் இருவரை மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ஒரு வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்காக ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் உள்ள காவல் ஆய்வாளா் பல்வந்த் சிங் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஒருவா் அளித்த புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் பல்வந்த் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாா்தாரா் தனக்கும் பல்வந்த் சிங்குக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு லஞ்சத் தொகை ரூ.5 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகக் கூறினாா்.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் பல்வந்த் சிங் மற்றும் இரண்டு இடைத்தரகா்களான ஹா்பால் சிங் மற்றும் ஜனேந்தா் சிங் ஆகியோரை சிபிஐ சண்டீகரில் கைது செய்தது. பல்வந்த் சிங்கின் உத்தரவின் பேரில் இடைத்தரகா்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது என்று அதிகாரி தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட அனைவரும் சண்டீகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள்‘ என்று சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஒரு அறிக்கையில் தெரிவித்தாா்.

பின்னா், அனைத்து குற்றம் சாட்டப்பட்டவா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பல குற்றவியல் ஆவணங்களை மீட்டெடுக்கப்பட்டதாக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

மணல் குவாரி முறைகேடு: கலெக்டர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 செப்டம்பர் 12-ம் தேதி சோதனை நடத்தினர்.

குறிப்பாக, இதில் தரகர்களாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம், அசையும் சொத்துகள், அசையா சொத்துகளை முடக்கி, பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

சுமார் ரூ.4,000 கோடிக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, தமிழக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா பல்வேறு ஆவணங்களுடன் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, அமலாக்கத் துறை விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்களும் ஏப்ரல் 25-ம் தேதி(நேற்று) ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பிரதீப்குமார் (திருச்சி), தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), எம்.தங்கவேலு (கரூர்), ஜெ.ஆனிமேரி ஸ்வர்ணா (அரியலூர்), வி.ஆர்.சுப்புலட்சுமி (வேலூர்)ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் மணல் குவாரி தொடர்பான ஆவணங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்ததால், 5 பேரும் அங்கு சென்றனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், டெண்டர் அடிப்படையில்தான் மணல் அள்ளப்பட்டதா, அவை முறையாக கண்காணிக்கப்பட்டதா என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஆட்சியர்கள் அளித்த பதில், வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 10 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

குவாரிகளில் சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்கள், ஆட்சியர்கள் கொண்டு வந்த ஆவணங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.