காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஐபிசி பிரிவுகள் 294(பி), 509, 353 ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை நேற்று (மே.4) அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தாராபுரம் ஐடிஐ சந்திப்பு அருகே காவல்துறை வாகனம் மீது, அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தாராபுரம் மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.