நாமக்கல், எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 67. இவரது பேரன் பகவதி 20, ஏப்ரல் 30ம் தேதி கொசவம்பட்டி வீட்டில் இருந்த தாய் நதியா (40),வுக்கும் சண்முகத்திற்கும் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தார். இருவருக்கும் வயிற்று வலி, வாந்தி வரத்தொடங்கியது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று( மே 02) இரவு சண்முகம் இறந்தார்.

நதியா, சண்முகம் சாப்பிட்டு வைத்த மீதி உணவு சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அதேசமயம் பகவதி, ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பகவதி வாங்கி சென்ற உணவில், எவ்வாறு விஷம் கலந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். பகவதி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என பகவதி ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் போலீசாரிடம்:

2 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தேன். அதனை தாயாரும், தாத்தாவும் ஏற்கவில்லை. இதனால், இரண்டு குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. தாயார் நதியாவும் என்னிடம் பாசமாக இல்லை. ஒரு பெண்ணுடன் உள்ள தவறான பழக்கம், ஆபாச படங்களை பார்ப்பது குறித்து தாத்தாவும், தாயாரும் கண்டித்தனர். இதனால், விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி, 30ம் தேதி சிக்கன் ரைசில் கலந்து கொடுத்தேன். அதனை இருவர் மட்டுமே சாப்பிட்டனர். மற்றவர்கள் சாப்பிடவில்லை” என கூறினார்.

இதனையடுத்து பகவதியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here