சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி நிறைவு பெற்றது. தியாகராய நகரில் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணி நடைபெற்றது. வாகனப் பேரணி நடைபெற்ற சாலையில் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள், மக்கள் சூழ்ந்து பூக்களைத் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பேரணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அங்கு இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை வேலூர் சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
பட்டு வேட்டி-சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி
சென்னை வாகனப் பேரணியில் பட்டு வேட்டி அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். சென்னை விமான நிலையதிற்கு வழக்கமான உடையில் வந்த அவர், பேரணியில் தமிழர் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டார்.
பிரதமர் மோடியுடன் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பேரணி சென்ற வாகனத்தில் உடன் இருந்தனர்.
தென்சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாலார் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.