வழக்கில் விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஹரியாணாவின் காவல் ஆய்வாளா் மற்றும் இருவரை மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ஒரு வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்காக ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் உள்ள காவல் ஆய்வாளா் பல்வந்த் சிங் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஒருவா் அளித்த புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் பல்வந்த் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாா்தாரா் தனக்கும் பல்வந்த் சிங்குக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு லஞ்சத் தொகை ரூ.5 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகக் கூறினாா்.
இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் பல்வந்த் சிங் மற்றும் இரண்டு இடைத்தரகா்களான ஹா்பால் சிங் மற்றும் ஜனேந்தா் சிங் ஆகியோரை சிபிஐ சண்டீகரில் கைது செய்தது. பல்வந்த் சிங்கின் உத்தரவின் பேரில் இடைத்தரகா்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது என்று அதிகாரி தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட அனைவரும் சண்டீகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள்‘ என்று சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஒரு அறிக்கையில் தெரிவித்தாா்.
பின்னா், அனைத்து குற்றம் சாட்டப்பட்டவா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பல குற்றவியல் ஆவணங்களை மீட்டெடுக்கப்பட்டதாக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.