ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது ரத்னம்.
சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும் சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார்.
நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “கொள்கைக்காக தான் கொலையே செய்வேன்” என்ற மனநிலையில் தான் இருக்கின்றார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார். தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது. இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கவுதம் வாசுதேவ் மேனன் என்ட்ரி எல்லாம் சரி தான் ஆனால் ஒரு உயர் அதிகாரி இப்படி அசிங்கமான வார்த்தையால் திட்டுவாரா? என்று சிந்திக்க வைத்துவிட்டது. இசை காது வலிக்குதுப்பா….. ஒளிப்பதிவு ஓகே. முரளிசர்மாவின் வில்லன் நடிப்பு எப்படி என்றால் பவுடர் அடிப்பது, நெத்தியால் முட்டுவது, டவுசரோடு சுத்துவது…. அம்மா கதை ஒரு பக்கம், அப்பா கதை ஒரு பக்கம், பிரியா பவானி சங்கர் கதை ஒரு பக்கம் என கதையே புரியாமல் ரசிகர்கள் குலம்பிவிட்டனர். படம் முழுக்க வரும் வெட்டு, குத்து, ரத்தம் என ஒரு கட்டத்தில் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
ஹரி படம் என்றாலே விறுவிறுப்பு, காதல், செண்டிமெண்ட் எல்லாம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆனால் இந்த படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இனி மேல் ஹரி அவர்கள் கதையை சரியான முறையில் தேர்வு செய்து இயக்கினால் நல்லது…. இல்லைஎன்றால்………….?
இந்த “ரத்னம்”- செம அடி

















