தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக வெளியிடப்படும் போலி அறிக்கைகளால், அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர் விஜய், அதுபற்றி போலீசில் முறையிட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை, நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் துவங்குவதாக அறிவித்தார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், இந்திய தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அவற்றை சரி செய்து, மீண்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கங்கள் உள்ளன. அக்கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடும் அறிக்கைகள் இடம் பெறுகின்றன.
இதேபோன்ற பெயரில், பல போலி சமூக வலைதள பக்கங்களும் செயல்படுகின்றன. இதில், ஆபாச படங்கள் அதிகளவில் பதிவேற்றப்பட்டு, விஜய் ரசிகர்கள் மத்தியில், அதிருப்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேடு போன்று உருவாக்கி, அதில், பல்வேறு பொய் செய்திகள் பரப்பபடுகின்றன.
விஜய்யுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் கூறியது போல, போலி அறிக்கை தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேச நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி மீண்டும் வருவதற்கு ஓட்டளிக்க வேண்டும் என, விஜய் கூறியது போல, மற்றொரு போலி அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இவ்வாறு போலி அறிக்கைகள் அதிகளவில் பரவும் நிலையில், இது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.