சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் வரபிரகாசம்(55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஸ்வாசமேரி(50), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்,
இதற்கிடையில், வரபிரகாசம் விஸ்வாசமேரி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போதெல்லாம் அவர் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய விஸ்வாசமேரியிடம் மது போதையில் இருந்த வரபிரகாசம், “யார் கூட ஊர் சுற்றிவிட்டு வருகிறாய்” என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் விஸ்வாசமேரி படுக்கையறைக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த வரப்பிரகாசம் படுக்கை அறையில் படுத்து இருந்த மனைவி விஸ்வாசமேரியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தாய் இறந்து கிடந்ததை பார்த்து அவரது மகள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லப்பாக்கம் போலீசார் விஸ்வாசமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.