தீபாவளி பண்டிகை நாளை 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தீபாவளியை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வது வழக்கம். வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பேருந்து, ரயில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னையில் பெரியார் சாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் கோயம்பேடு, 100 சாலை, பாரிமுனை சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்படும்.
பொதுமக்களின் வசதிக்காக, கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில்இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்து சேவை, பெருங்களத்தூர் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பெருங்களத்தூர் தொடங்கி பரனூர் டோல்கேட் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமானது. இதன் காரணமாக, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைகின்றனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து காவல் போலீசார் ஈடுபட்டாலும் முழு அளவில் சமாளிப்பது கொஞ்சம் கடினமானது தான்.
இந்நிலையில், தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு தனியார் வாகனங்களில் செல்வோர் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.