தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் குவாஹாட்டி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.” – ஆளுநர் ரவி.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் அறிக்கை: 

தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர், ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை, வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நன்றி’’ என தூர்தர்ஷன் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here