1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா ஜித். இவளுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். மனிஷா பருவ வயதை கடந்த பின்னரும் பூப்படையாமல் இருக்கிறார். இவருடைய தங்கை ஒரு நாள் வயதுக்கு வந்து விடுகிறார்.

இது மனிஷாவிற்கு சந்தோஷத்தை அளிக்காமல் வருத்தத்தை அளிக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் மனிஷாவையும், அவரது தாயையும் மறைமுகமாக குறை கூறுகிறார்கள். வயதுக்கு வந்த இளைய மகளை வீட்டுடன் வைத்திருந்தால்.. வயதுக்கு வராத மூத்தவள் மனம் சங்கடப்படுவாள் என கருதி தாயானவள்.. வயதுக்கு வந்த இளைய மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.

வயதுக்கு வராத கதையின் நாயகியான மனிஷா பூப்படைவதற்காக காவல் தெய்வத்தை வணங்குகிறார். அத்துடன் அந்த ஊரில் உள்ள சித்த வைத்தியரிடம் மருந்து வாங்கி சாப்பிடுகிறார். 48 நாட்களுக்குள் பூப்படைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் மருந்தை சாப்பிடத் தொடங்குகிறாள் மனிஷா ஜித். இந்நிலையில்  அவளின் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார். கனவில் கண்டதும் காதல் கொள்ளும் நாயகி கனவு கலைந்த பிறகும் நாயகனை நினைத்துக் கொண்டிருக்கிறார். 

தெருக்கூத்து கலைஞரான ஆர்.எஸ்.கார்த்திக், கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகியின் கிராமத்திற்கு வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக மனிஷாஜித் வெளிப்படுத்த, அவரது கண்கள் மூலம் அவரது மனஓட்டத்தை அறிந்துக் கொள்ளும் ஆர்.எஸ்.கார்த்திக்கும் அவரை காதலிக்க தொடங்குகிறார். 

இருவரும் கண்கள் மூலமாகவே தங்களது காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். ஆர்.எஸ்.கார்த்தி, தெருக்கூத்தின் இறுதி நாளில் நாயகியை சந்தித்து தனது காதல் பற்றி பேச முயற்சிக்கும் போது, நாயகி மனிஷாஜித்தின் மாமா நாயகியை  கொலை செய்ய முயற்சிக்கிறார். பிறகு நாயகன் என்ன செய்தார்? காதல் என்ன ஆனது என்பது கதை.

நடிப்பு எல்லாம் ஓகே தான். படத்திற்கு செல்வ நம்பியின் பாடலும், பின்னணியிசையும் பக்க பலமாக இருக்கிறது. ஜெய்சங்கர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் ரசிகர்களை இருக்கையில் அமர செய்கிறது.

சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது…. காமெடியேல்லாம் படத்தில் ஒன்றும் இல்லை…. கதையை சொல்லும் விதத்தை மேலும் சிறப்பாக சொல்லிருக்கலாம்.

ஆர்யமாலா- கிராமத்து காதல் 

   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here