ஒரு அமெச்சூர் திருட்டுக் கும்பலின் தலைவன் குருநாத் (சிவா). அவரிடம் எடுபிடிகளாக இருக்கிற இரண்டு அப்பாவி அல்லக்கைகள் (கல்கி & கவி). மூவரும் சேர்ந்து சின்னச் சின்னதாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு, ஆயிரங்களில் பணம் கறக்கின்றனர். பெரிய கடத்தலில், பெரிய மனிதர்களோடு மோதலில் ஈடுபட இக்கும்பல் தயாராக இல்லை. காரணம், இவர்களது கொள்கைகள் அப்படி (முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கிளாஸ் எடுப்பது நினைவில் இருக்கிறதா, அதே பாயிண்ட்கள் தான்).

வங்கியில் பணம் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிச் சிறை சென்று திரும்பியவர் குருநாத். அந்த வழக்கிற்காக, அவரைக் கைது செய்யும்போது போலீஸ் அதிகாரிகளான பிரம்மாவும் (யோக் ஜேபீ) தேவநாதனும் (கராத்தே கார்த்தி) காயமடைகின்றனர். காவல் துறையில் இருந்து விலக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், குருநாத் கும்பலைப் பழி வாங்குகிற வாய்ப்பைப் பெறுகிறார் தேவநாதன். பிரம்மாவோ, நிதியமைச்சராக இருக்கும் அருமைப்பிரகாசத்தின் (கருணாகரன்) மோசடிகளை அம்பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.

அத்தனைக்கும் நடுவே, எந்தச் சம்பந்தமும் இல்லாமல் அருமைப்பிரகாசத்தைக் கடத்த முடிவெடுக்கிறார் குருநாத். காரணம், அவருக்கு மட்டுமே புலப்படுகிற ஒரு மாயப்பெண். அவரது பெயர் அம்மு (ஹரிஷா ஜெஸ்டின்). குருநாத்தின் மூளையில் ஏற்படுகிற ‘ஹாலுஷினேஷன்’ காரணமாகவே, அந்த உருவம் அவருக்குத் தென்படுகிறது. இது அவரது சிஷ்யர்களுக்கு மட்டுமே தெரியும்.

’டேவிட்டால் எப்படி கோலியாத்தை வீழ்த்த முடியும்’ என்ற நினைப்பு, சிலநேரங்களில் தவிடுபொடியாகும். அப்படித்தான், அருமைப்பிரகாசத்தைக் குருநாத் கும்பல் கடத்திச் செல்கிறது. அவர்களைத் துரத்திப் பிடிக்க பிரம்மா, தேவநாதன் இருவரும் வெறி கொண்டு திரிகின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதே கதை…..

முதல் பாகத்தில் நடித்தவர்களில் ராதாரவி, கருணாகரன், அருள்தாஸ், யோக் ஜேபீ, எம்.எஸ்.பாஸ்கர், அவரது மனைவியாக நடித்தவர், நம்பிக்கை கண்ணனாக நடித்தவர் என்று இதிலும் அனைவரும் தலைகாட்டியிருக்கின்றனர். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக்செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா கூட்டணிக்குப் பதிலாக இதில் மிர்ச்சி சிவா, கல்கி, கவி, ஹரிஷா ஜெஸ்டின் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பின்னணி இசை ஓகே. 

படத்தில் சில இடங்களில் கதை சோதிக்கிறது…. பாடல்கள் பெரிய அளவில் பதியவில்லை….

இந்த சூது கவ்வும் 2- வை பார்த்து சிரித்து விட்டு வரலாம்…..

ராஜ் குமார்- சினிமா நிருபர்   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here