இயக்கம்: நா ஹாங்-ஜின்
நடிப்பு: ஹ்வாங் ஜங்-மின், ஜோ இன்-சங், ஜங் ஹோ-யோன், அலிசியா விகாண்டர், மைக்கேல் ஃபாஸ்பெண்டர்…
அமைதியான கடலோரப் பகுதியில் மர்மமான உயிரினம் தோன்றுவதிலிருந்து தொடங்குகிறது Hope. அதன் தாக்குதலால் ஒரு சிறிய நகரமே அச்சத்திலும் குழப்பத்திலும் சிக்க, காவல்துறை அதிகாரி, அவரது உதவியாளர் மற்றும் ஒரு வேட்டைக்காரர் மக்களை காப்பாற்ற போராடுகின்றனர். படத்தின் முதல் பாதி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. உயிரினத்தை முழுமையாகக் காட்டாமல் அதன் தாக்கத்தையும், மக்களின் அச்சத்தையும் காட்சிகளின் மூலம் உருவாக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். திடீர் தாக்குதல்கள், துரத்தல்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் பதற்றத்தை அதிகரிக்கின்றன.
ஆனால் இரண்டாம் பாதியில் கதை வேற்றுக்கிரகப் பின்னணியை நோக்கி விரிவடையும் போது திரைக்கதையின் வேகம் சற்று தடுமாறுகிறது. பல புதிய தகவல்கள் சேர்க்கப்படுவதால் கதை கொஞ்சம் குழப்பமாகத் தோன்றுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சில இடங்களில் நீளமாக உணரப்படுகிறது. ஹ்வாங் ஜங்-மின் மற்றும் ஜோ இன்-சங் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ஜங் ஹோ-யோனின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்தின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன. மொத்தத்தில், வழக்கமான ஏலியன் அல்லது மான்ஸ்டர் படங்களிலிருந்து வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட Hope, முதல் பாதியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில நீளமான பகுதிகள் இருந்தாலும், வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் விரும்புபவர்கள் பார்க்கக்கூடிய படம்.
-M.கிரிஜா (சினிமா நிருபர்)
















