புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழி சாலை கிராமம் உள்ளது. இம் மெய்வழி மக்கள் பிரம்ம பிரகாச ‘மெய் வழி சாலை ஆண்டவர்கள்’ அவர்கள் ஒருவரையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த வழிபாட்டில் யாரும் இறுதி தருவாயில் தீட்டு வெளியாகி துர் நாற்றம் வீசி சாவதில்லை. அனைவருமே அடக்கம் ஆகிறார்கள் என்பது இந்த மெய் வழி சாலை வழிபாட்டின் அதிசயம், அற்புதம், ஆச்சர்யம். கோளரிசாலையர் பொங்கல் திருவிழா, பங்குனி பிறவானாட் பிறப்பு திருநாள் திருவிழா, வைகாசி பாசுபத சன்னத திருக்காப்பு திருவிழா, புத்தாடை புனைசீர் திருவிழா, புரட்டாசி பிச்சை ஆண்டவர் திருக்கோலகாட்சி திருவிழா, கார்த்திகை கார்க்கும் தீ கை கொண்ட கார்த்திகையர் தீபதிருநாள் போன்ற திருவிழாக்களை இம்மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதன்படி மெய்வழிச்சாலையில் நேற்று மெய்வழி தலையுக ஆண்டு 124 கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. சபைக்கரசர் சாலை வர்க்கவான் கார்த்திகை மகா தீபம் ஏற்றி கூட்டு பிரார்த்தனையுடன் விழாவை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் திரளான மெய்வழிச்சாலையினர் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றினர்.
இதை பற்றி அம்மக்கள் கூறுகையில்: எங்கள் குருநாதர் ‘மெய் வழி சாலை ஆண்டவர்கள்’ சொன்ன முறை படி மட்டுமே செயல்படுவோம். அவர்கள் பெருங்கருணையினால் இந்த அடக்க செயல் நடைபெற்று வருகிறது. உலக மக்கள் யாராக இருந்தாலும் இறுதியில் எமன் கையில் தான் சிக்க வேண்டும். அதில் இருந்து தப்பிக்க இந்த உலகத்தில் ஒரே வழி மெய்வழி சாலை எல்லை தான். இதற்கான செயலை எங்கள் தெய்வம் தற்போது வரை செய்து கொண்டு வருகிறார்கள். எங்கள் தெய்வம், குருநாதர் ‘மெய் வழி சாலை ஆண்டவர்கள்’ அவர்கள் தான் சிவ பெருமான், அல்லா, இயேசு பிரான், உலகத்தை உண்டாக்கிய இறைவன் என்பது ஆதாரத்துடன் வேதங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். அனைவரும் இங்கே வந்து தெய்வத்தை பற்றி தெரிந்து கொண்டு இறுதியில் எமனிடம் சிக்காமல் தப்பித்து கொள்ளுங்கள்…… என்று மெய் வழி மக்கள் கூறினர்.