இயக்கம்: எம். ஜானகிராமன்
நடிகர்கள்: கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி
இசை: நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பு: சி.வி. குமார்

விமர்சனம்:

பூமிநாதனாக காளி வெங்கட், சூர்யாவாக கலையரசன், சந்துருவாக ராகவ் விஜய் என மூன்று மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றன. கல்லூரிக் காதலியான அம்முவின் (கயல் ஆனந்தி) பிடிவாதங்களையும், கொடைக்கானலில் நிகழ்ந்த காதல் சம்பவங்களையும், இறுதியில் ஏற்பட்ட பிரிவையும் சூர்யா விவரிக்கிறார். பள்ளிப் பருவத்தில் காவேரி மீது கொண்ட ஒருதலைக் காதலை பூமிநாதன் நினைவுகூர்கிறார்.

மறுபுறம், காதலியுடன் (அஷ்னா ஜவேரி) பிரிந்துவிட்ட சந்துரு, தீபாவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிறார். ஆனால், தனது கடந்தகாலக் காதல் வாழ்க்கையை மறைக்காமல் வரப்போகும் மனைவியிடம் சொல்லிவிட வேண்டும் என்பது அவரது எண்ணம். இதற்கு பூமிநாதன் கொடுக்கும் அறிவுரை வேறு!

இப்படிப் பேசிக்கொண்டே செல்லும் மூவரின் பயணம் பெங்களூருவை அடைகிறது. சந்துருவின் திருமண அழைப்பை ஏற்று அவரது நண்பர்களும் செல்கின்றனர். அங்கிருந்து கதை எடுக்கும் திருப்பங்களும், வெளிப்படும் ரகசியங்களும் படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கின்றன. சந்துரு தனது கடந்தகாலக் காதலை மணமகளிடம் சொன்னாரா? திருமணத்தில் காத்திருக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்ன? என்பதே கதை…

காதல் என்றாலே மகிழ்ச்சி மட்டுமல்ல, சில நேரங்களில் ஏமாற்றமும் வலியும் கூடவே வரும் என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாகச் சொல்ல முயற்சிக்கும் திரைப்படம் ‘டைட்டானிக்.

கலையரசன் தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். காதல், கோபம், குழப்பம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார். நாயகியாக நடித்த ஆனந்தி, தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளிலும் உணர்ச்சிகரமான தருணங்களிலும் கதைக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஆஷ்னா சவேரி தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு கூடுதல் வண்ணம் சேர்க்கிறார். காளி வெங்கட் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோரின் நகைச்சுவை பங்களிப்புகள் சில இடங்களில் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கின்றன. சென்னை, கொடைக்கானல், கோவை உள்ளிட்ட இடங்களின் பின்னணியில் பயணிக்கும் கதை, நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளுடன் நகர்கிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.

இந்தப் படத்தின் மற்றொரு பலம் அதன் திரைக்கதை அமைப்பு. சாதாரணமாகக் கடந்து போகும் சில வசனங்கள்கூட பின்னர் நிகழும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது இயக்குநரின் கவனத்தையும் உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

பலம்:
இளைஞர்களின் காதல் மனநிலையைப் பிரதிபலிக்கும் கதைக்களம்.

பலவீனம்:
சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது.

இறுதி தீர்ப்பு:
காதலில் விழுந்தவர்கள், காதலில் தோற்றவர்கள், காதலைத் தேடுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் காதல் குறித்த அனுபவங்கள் வேறுபட்டிருக்கும். அந்த அனுபவங்களின் சில பக்கங்களை நகைச்சுவையுடன் நினைவுபடுத்துகிறது இந்தப் படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here