புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனாலும் இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

முதல்வர் அறிவிப்பின்படி, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிங்கார வேலர் நினைவு தினத்தையொட்டி கடலூர்-புதுச்சேரி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டார் அப்போது வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் ஒன்றுகூடியிருந்த பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் ஏராளமானோர் முதல்வரின் காரை முற்றுகையிட முயன்று அவரது காரை பின்தொடர்ந்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் வவுச்சர் ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது முதல்வரின் கார், அந்த இடத்தை கடந்து சென்ற நிலையில், போலீஸாருக்கும் வவுச்சர் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே நெல்லித்தோப்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீஸாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஊழியர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு விழுந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த சமயத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் போலீஸாரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பெண் ஊர்க்காவல் படையினர் பவதாரணி, ராஜலட்சுமி ஆகியோரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதில் ஏனாமைச் சேர்ந்த படுகு சுப்புராஜ் (45) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமைனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், காயமடைந்த 13 ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் சங்கத் தலைவர் சரவணனை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் போலீஸார் தடியடி நடத்தியதில் காயமடைந்த 14 வவுச்சர் ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், திமுக தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

“பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள், கரோனா காலத்தில் பணியில் சேர்ந்த செவிலியர்கள், அரசு பள்ளி ஒப்பந்த ஆசிரியர்கள், என்ஆர்எச்எம் ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், மின்துறை ஊழியர்கள் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள்.

பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க அமைதியான முறையில் சென்றனர். ஆனால், காவல் துறையை ஏவிவிட்டு அவர்களை காட்டுமிராண்டிதனமாக அடித்துள்ளனர். 14 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இது ஆட்சியாளர்களின் அராஜகத்தின் உச்சகட்டம். இதுபோன்ற அராஜக ஆட்சி புதுச்சேரியில் இருந்தது இல்லை.

இந்தச் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் போராட்டம் நடத்த உள்ளோம். காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் நாளை சட்டப்பேரவையில் இப்பிரச்சினையை முன்வைத்து, அரசு உரிய பதில் சொல்ல வேண்டும் என பேச உள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here