கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஆந்திரத்தில் இருந்து கொச்சி சென்ற சிவப்பிரகாஷ் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, தலா ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.
அவா் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும், முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்ததால் சிவப்பிரகாஷை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு நடத்திய விசாரணையில், ஆந்திரத்தில் இருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து கோவை வருமான வரித் துறை அலுவலா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். வருமான வரித் துறை அலுவலா்களிடம் சிவப்பிரகாஷையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணத்தையும் போலீஸாா் ஒப்படைத்தனா். இதையடுத்து ஆந்திரத்தில் அவாிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய நபா் யாா், கொச்சியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவா் யாா், எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.