இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘வணங்கான்’. படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
விமர்சனம்:
கன்னியாகுமரி, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த அருண் விஜய், அவரைப் போலவே திக்கற்று நின்ற தேவியை சிறுவயது முதலே தனது தங்கையாக வளர்த்து வருகிறார். கிடைக்கிற வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் கோட்டி தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார். இதனால் அவரது தங்கை உட்பட அவருக்கு உதவியாக வரும் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனிடையே, சுற்றுலா வழிகாட்டியாக பிழைப்பு நடத்திவரும் டீனா , கோட்டியை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு நிரந்தரமான வேலை இருந்தால், கோட்டி சரி ஆகிவிடுவார் என்று நம்பும் அவரது நலம் விரும்பிகள், ஆதரவற்ற இல்லம் ஒன்றில் கோட்டியை காவலராக வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். அந்த இல்லத்தில், குழந்தைகள், பெண்கள் என பல பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர்.
அந்த இல்லத்தில்,வெளியே சொல்ல முடியாத சம்பவம் ஒன்று நடக்கிறது. அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோட்டியிடம் முறையிட, சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் நேரிலும் பார்த்து விடுகிறார் அருண் விஜய். அவர்களை என்ன செய்தார் என்பதே மனதை உருக்கும் கதை…
சோகத்தை அள்ளி வழங்கும் கதாபாத்திரத்தில் நூறு சதவீதம் ஆத்மார்த்தமாக நடிப்பை வழங்கி அசத்தி உள்ளார் அருண் விஜய். சண்டை காட்சிகள் அதிரடி தான். பாச உணர்வு, காதல், சண்டை, நேர்மை என கதை ரசிக்க வைக்கிறது. இசை மற்றும் பாடல்கள் இனிக்கிறது.
பாதரியார் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா?! வன்முறை காட்சிகளில் கூடுதல் கவனம் வேண்டும்.
மொத்தத்தில் இந்த ‘வணங்கான்’ – நேர்மை கலந்த பாச வெறியன்
ராஜ் குமார் (சினமா நிருபர்)