கடந்த ஜூலை 17ம் தேதி குற்றவழக்கு தொடர்புடைய ஒரு நபரின் தொலைபேசி எண்ணின் வாட்ஸ்அப் கணக்கு குறித்த தகவல்களை வழங்குமாறு குருகிராம் போலீஸார், வாட்ஸ் நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், போலீசாரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும், அதனை கண்டுகொள்ளாமலும் அந்த நிறுவனம் இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து, மற்றொரு குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி தகவல்களை வழங்குமாறு ஜூலை 25ம் தேதி மீண்டும் குருகிராம் போலீசார் வாட்ஸ்அப் நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 28ம் தேதி வரை போலீசாரின் கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், குற்றவழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, வாட்ஸ்அப் இயக்குநர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கூறிய போலீசார், ‘நாட்டின் சட்டவிதிகளை மீறி, தகவல்களை அளிக்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது. இது சட்டப்படி குற்றம்,’ எனக் கூறினர்.
இந்தியாவில் செயல்படும் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும், தேவைப்படும் போது அரசுக்கு தேவையான விபரங்களை வழங்க வேண்டும் என்பது விதியாகும்.