ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனு மீதான விசாரணை விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணிநேரமாக நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திராபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். அவருக்கு செப்டம்பர் 22 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு காரில் அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவை போலீசார் அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக சிறை அருகே இருக்கும் அரசு மருத்துவமனையில் அவருடைய உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை போலீசார் நடைமுறைகளை பின்பற்றி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க கோரி அவருடைய வக்கீல் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சந்திரபாபு நாயுடு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிமன்றம் அவருடைய பொது வாழ்க்கை, வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுகளை வழங்கவும், மருந்து மாத்திரைகளை அனுமதிக்கவும், சிறையில் தனி அறை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு சிறை நிர்வாகம் விசாரணை கைதியின் 7691ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சி மாநில தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் கிஞ்சராபு அச்சன்நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில். 40 ஆண்டுகால நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட சந்திரபாபு நாயுடுவை சட்டவிரோதமாக கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி ரீதியாகவும், ஜெகன் ரெட்டியின் கோஷ்டி அரசியலுக்காகவும் 11.09.2023 திங்கட்கிழமை ஆந்திரா மாநிலம் முழுவதும் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேன, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே ஆந்திர மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குப்பம் தொகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனிடையே சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சந்திரபாபு நாயுடு கைது, அதனையடுத்து நடைபெறும் பந்த் காரணமாக ஆந்திராவில் பதற்றம் அதிகரித்துள்ளது.