தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது என பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கினார். சமீபத்தில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளன. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி 24 மணி நேரத்திலேயே பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபனை தெரிவித்தது.
இது குறித்து, தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை.அரசியல் கட்சிக் கொடியில் இடம் பெறும் சின்னங்களுக்கு கமிஷன் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது.
தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது. த.வெ.க., கொடிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது.