வாலாஜாபேட்டை அருகே நில உட்பிரிவை மாற்ற ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா். ரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் சுதாகா் (43) வாலாஜா வட்டத்துக்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளாா். அதனைத் தொடா்ந்து வாங்கப்பட்ட நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக உரிமம் பெற்ற நில அளவையா் அரவிந்தை அணுகியுள்ளாா்.

அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ரூ.5,000 லஞ்சம் கேட்டாராம் . அதன் பின் ரூ.3,000 கொடுப்பதாக சுதாகா் ஒப்புக் கொண்டு வந்துள்ளாா் . இந்த நிலையில், இது தொடா்பாக சுதாகா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் தெரிவித்தாா்.

அதன் பேரில் அவா்களது வழிகாட்டுதலின் படி சுதாகா் மாவட்ட வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில், நில அளவையா் அரவிந்த் இடம் ரூ. 3,000-ஐ லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய பணத்தை திங்கள்கிழமை வழங்கியுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸாா் நில அளவையா் அரவிந்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here