கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த தேரேகால்புதூர்,எஸ்.பி காலணி 13வது தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய சுபாஷினி. இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது சுபாஷினிக்கு தனது உறவுக்கார சகோதரியின் கணவரான 43 வயதுடைய மதன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தன்னுடன் பணிபுரியும் செவிலியரை வீட்டிற்கு அழைத்து பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் கள்ளக்காதலால் பிறந்த இந்த குழந்தை வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்து பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றிருக்கிறார்.
பின்னர் வீட்டின் சுற்றுப்புற சுவர் அருகே உள்ள புதரில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாக சுசீந்திரம் போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் சுபாஷினி, மதன்குமாருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் கர்ப்பமானது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, நேற்று சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்து, மூடி மறைக்க திட்டமிட்டு பச்சிளம் குழந்தையை வீட்டு முன்பு தூக்கி வீசி விட்டு எதுவும் தெரியாமல் சென்று விட்டது தெரியவந்தது. இதனால் குழந்தை துடிதுடிக்க இறந்தது என சுசீந்திரம் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் மதன் குமார் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குழந்தையை வீசி கொன்ற சுபாஷினியை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை வீட்டு அருகே தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















