திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, 2 மகன்கள் பலியாகினர். அவர்களை காப்பாற்ற முயன்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
கட்டிட தொழிலாளி
 
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 47). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு விஜயகணபதி (17), சந்தோஷ்குமார் (14) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். திருப்பதியும், அவரது மனைவியும் கட்டிட தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்களது மூத்த மகன் விஜயகணபதி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இளைய மகன் சந்தோஷ்குமார், அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

 
தொடர் மழை
 
சின்னாளப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர் மழை பெய்தது. இதற்கிடையே நேற்று காலை திருப்பதி, தனது மனைவியை கூலி வேலைக்கு அனுப்புவதற்காக அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செட்டியபட்டி பிரிவுக்கு சென்றார். அங்கு மனைவியை இறக்கிவிட்டு, திருப்பதி தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது மழை பெய்ததால் தலையில் துணியை கட்டிக்கொண்டு வந்தார். வீட்டிற்கு வந்ததும் தலையில் கட்டியிருந்த துணியை, வீட்டின் முன்பு இருந்த கம்பியில் காய போட்டார். 
 
மின்சாரம் பாய்ந்தது
 
ஆனால் மழை பெய்து கொண்டே இருந்ததால் ஏற்கனவே அந்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு இருந்தது. இதை அறியாமல் துணியை காயப்போட்ட போது, திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அபயகுரல் எழுப்பினார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது மகன்கள் விஜயகணபதியும், சந்தோஷ்குமாரும் ஓடிவந்தனர். அவர்கள் தங்களது தந்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் திருப்பதி மின்சாரம் பாய்ந்த கம்பியை பிடித்தவாறும், அவரை பிடித்தவாறு விஜயகணபதியும், சந்தோஷ்குமாரும் உயிருக்கு போராடினர். 
 
காப்பாற்ற முயற்சி
 
இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகனும், அவரது மனைவி சூர்யாவும் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து திருப்பதி மற்றும் அவரது மகன்கள் மீது அடித்து, காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் முருகன் மற்றும் சூர்யா மீதும் மின்சாரம் பாய்ந்து, தூக்கிவீசப்பட்டனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த திருப்பதி, அவரது 2 மகன்கள் மற்றும் முருகன், சூர்யா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
3 பேர் பலி
அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் திருப்பதி மற்றும் அவரது 2 மகன்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த முருகன் மற்றும் அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். இந்த சம்பவம் குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் பலியான சம்பவம், செட்டியபட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here