புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மணமேல்குடியில் அதிகபட்சமாக 185 மில்லி மீட்டரும், பொன்னமராவதியில் 110 மி.மீ., புதுக்கோட்டையில் 95 மி.மீ. மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை பெரியார் நகர் ஹவுசிங் யூனிட் முதல் தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வாளியில் எடுத்து வெளியே ஊற்றி அகற்றினர். மழைநீர்வடிகால், சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மழை நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டது. கழிவு நீருடன் மழை நீர் கலந்து சாலையில் பல இடங்களில் ஆறு போல பாய்ந்தோடியது.
 
குளம் போல் தேங்கிய மழைநீர்
 
புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அந்த அலுவலகத்தில் இருந்து பெரியார் நகர் நோக்கி வரக்கூடிய சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓரிரு கடைகளை மழைநீர் சூழ்ந்தது. சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மழை நீரில் சீறிப்பாய்ந்த படி சென்றன. புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலையோரங்களில் மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாரி மழைநீர் பாய்ந்தோடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மழைநீர் வடிகால் சாக்கடை கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
திருவரங்குளம்
 
திருவரங்குளத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 12 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் சாலைகளிலும் வாரிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாசன குளங்கள் ஓரளவிற்கு நிரம்பியது. திருவரங்குளத்தில் தெப்பக்குளம் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியது.
 
ஆலங்குடி
 
ஆலங்குடியை சுற்றியுள்ள பள்ளத்தி விடுதி, ஆலங்காடு, அரையப்பட்டி, வன்னியன் விடுதி, மெய்க்கேல் பட்டி, கும்மங்குளம், புதுக்கோட்டை விடுதி ஆகிய பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. தண்ணீர் செல்லும்  வரத்துவாரிகள் முறையாக இல்லாததால் தண்ணீர் வீடுகளை சூழ்ந்து நின்றது. நகரில் நீர் வழிந்தோடும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது.
 
பொன்னமராவதி
 
பொன்னமராவதி தொட்டியம்பட்டி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று பெய்த பலத்த மழைக்கு மழை நீர் செல்ல வழி இல்லாததால் அங்கன்வாடி முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மழைக்காலங்களில் அங்கன்வாடி மையத்தை சுற்றி தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் மின் கசிவு, சிலிண்டர் கசிவு அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அல்லது அங்கன்வாடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.
 
கோட்டைப்பட்டினம்
 
புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு திடீரென கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், கரகத்திகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. மேலும், விவசாயத்திற்காக உழுது போட்ட வயல்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது. 
 
கீரனூர்
 
கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். கீரனூர் ஓ.வி.கே. நகர், மேல புதுவயல் ரோடு பரந்தாமன் நகர், ஜெய்ஹிந்த் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர்.
புதுக்கோட்டையில் நேற்று காலை 8 மணிக்கு மேல் வெயில் அடிக்க தொடங்கியது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் வெயில் அடித்தது. ஆங்காங்கே ஓடிய மழைநீர் வடிந்து நின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here