ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பிரதர்’. 

ஜெயம் ரவி, அவரது கண்ணில் படும் தவறுகளையும், அநியாயங்களையும் எதிர்ப்பவர். இதனால், தனக்கோ தன்னுடைய குடும்பத்தினருக்கோ ஏற்படப்போகும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க மாட்டார். இதனால் அப்பா அச்யுத் குமார் ஜெயம்ரவியை வெறுக்கிறார். இவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டில் பெரிய கல் ஒன்று விழுகிறது. உடனே கோபம் அடைந்த ஜெயம்ரவி மாநகராட்சிக்கு புகார் கொடுத்து கட்டிடத்தை இடிக்க அனுமதி கடிதத்தை வாங்குகிறார். உடனே அடுக்குமாடி சங்கத்தினர் எங்களிடம் சொல்லாமல் ஏன்? இப்படி செய்தாய்? என சண்டைக்கு வருகின்றனர். சண்டை நடக்கும் போது போலீஸ் வாகனத்தில் ஜெயம்ரவியை மட்டும் அழைத்து செல்கின்றனர்.

உடனே அப்பா அச்யுத் குமார் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். தனது அப்பாவை காண ஜெயம்ரவியின் அக்கா பூமிகா மருத்துவமனைக்கு வருகிறார். நான் இவனை திருத்துகிறேன் என கூறி தனது வீடான ஊட்டிக்கு அழைத்து செல்கிறார். அங்கேயும் ஜெயம்ரவி அடங்காமல் சண்டை, கோபம், நியாயம் என சட்டம் பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் காதலும் மலர்கிறது. பிறகு தனது அக்கா பூமிகா கணவரான நட்டியுடனும் சண்டை ஏற்படுகிறது. பூமிகாவின் மாமனார் ரமேஷ் ராவ் அவருடனும் சண்டை. சண்டை உச்சம் அடைந்து குடும்பம் பிரிகிறது. இந்த செய்தி ஜெயம் ரவியின் அப்பாவிற்கு செல்ல கடும் கோபம் அடைகிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

விளையாட்டு பிள்ளையாக நியாயமான இளைஞராக ஜெயம்ரவியின் நடிப்பு சிறப்பு. அக்காவாக பூமிகா, அவரது கணவராக நட்டி, ஆங்கிலம் பேசும் வக்கீலாக சரண்யா பொன்வண்ணன், அவரது கணவனாக ‘கலெக்டர்’ ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் ஆகியோர் இயக்குநர் கொடுத்த வேலையினை செய்திருக்கின்றனர். ‘மக்கா மிஷி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

ராஜேஷ் படம் என்றாலே காமெடி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த படத்தில் சரியாக இல்லை…. கதை ஜெவ்வாக இழுக்கிறது…. மருத்துவமனை சண்டையெல்லாம் கொஞ்சம் ஓவரப்பா….

இந்த பிரதர் – நியாய வெறியன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here