சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா (சாய் பல்லவி). ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார்.
முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வீரமரணம் அடைகிறார். மேஜர் முகுந்த் எப்படி இறந்தார்? என்பதை அழுத்தமாகவும், ஆணித்தனமாகவும் காண்பித்திருக்கிறது அமரன் திரைப்படம்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. கதை தெரியும் என்பதால் இறுதிவரை சுவாரஸியத்தைத் தக்க வைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரையில் ஒவ்வொரு துப்பாக்கி சத்தம் கேட்கும் போதும் மனதிற்குள் பதைபதைக்கிறது. முதல் பாதி, முகுந்த்-இந்து இடையேயான காதல், பெற்றோர்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது, ஹீரோவிற்கு தனது வேலையின் மீதான பிணைப்பு என கதைகளம் தோய்வில்லாமல் செல்கிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் இனி ஆக்க்ஷன் ஹீரோவாக மாறுவார்.
சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் பிற ராணுவ வீரர்கள் அதிக கவனம் ஈர்க்கின்றனர். அதிலும் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரராக வரும் வஹீப், விக்ரம் சிங் உள்ளிட்ட பாத்திரங்கள் மனதை உலுக்குகின்றன. படத்துடன் சேர்ந்து பயணிக்க வைப்பதில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
காதல் காட்சியில் கூடுதல் கவனம் தேவை… சில துப்பாக்கி சண்டை காட்சிகள் சரியாக எடிட் செய்யவில்லை….
இந்த அமரன்- நாட்டு பற்று உள்ளவன்.