கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, கடலூா் மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.
சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அவா்களுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே வழங்குகிறது. கடலூா் முதுநகரில் தனியாா் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.14,57,056 அரசிடமிருந்து வரவேண்டுமாம். இந்தத் தொகையை பெற்றுத் தரக் கோரி, தனியாா் பள்ளித் தாளாளா் பால சண்முகம், பலமுறை கடலூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். ஆனால், இந்தத் தொகையை விடுவிக்க தனக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென, மாவட்டக் கல்வி அலுவலக (தனியாா் பள்ளிகள்) கண்காணிப்பாளா் கணேசன் தெரிவித்தாராம்.
இதுகுறித்து தனியாா் பள்ளித் தாளாளா் பாலசண்முகம், கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாரளித்தாா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பால சண்முகத்திடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினா். இந்த நிலையில், கடலூா் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணியிலிருந்த தனியாா் பள்ளி கண்காணிப்பாளா் கணேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை பால சண்முகம் கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. கே.சத்தியராஜ், ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ், திருவேங்கடம், அன்பழகன் மற்றும் போலீஸாா் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.