துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஆகாசம்லோ ஒக்க தாரா. கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கோடு சேர்த்து ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) என்ற பெயரில் தமிழில் இன்று வெளியாகியுள்ளது. 

விமர்சனம்:

ஒரு எளிய கிராமத்திலுள்ள கதையின் நாயகி சாத்விகா வீரவல்லிக்கு 16 வயதிலே துல்கர் சல்மானோடு திருமணம் நடந்துவிடுகிறது. முதலிரவில் நாயகியின் வயதை அறிந்துகொள்ளும் ஹீரோ, அவரிடம் அவள் கனவு என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்ற அவளின் கனவுக்கு தோள் கொடுக்கிறார் ஹீரோ. ஹீரோவின் உதவியோடு ஹீரோயின் எப்படி விண்வெளிக்குச் சென்றார்? என்பதே கதை….

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) கனவுகளுக்கு எல்லை கிடையாது, அவற்றை அடைவதற்கான முயற்சிக்கும் வயது தடையல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.

கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். குறிப்பாக மனைவியின் கனவுக்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், உணர்ச்சிகரமான காட்சிகளும் பாராட்டுக்குரியவை.

கல்பனா கதாபாத்திரத்தில் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பெண்ணின் கனவு, ஆசை, விடாமுயற்சி, போராட்டம் ஆகியவற்றைத் தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் ஸ்ருதிஹாசன், ஸ்வாசிகா, ரோகிணி உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்திற்கு வலுசேர்க்கிறது. பிரகாஷ் குமாரின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு துணையாக அமைந்துள்ளன.

பலம் :
பெண்களின் கனவுகளுக்கு முக்கியத்துவம்.

பலவீனம்:
சில இடங்களில் உணர்ச்சிகரமான காட்சிகள் நீளமாகத் தோன்றுகின்றன.

இறுதி தீர்ப்பு:

ஒரு பெண்ணின் கனவை நிறைவேற்றுவதற்கு அவளுடைய குடும்பத்தின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதையும், திருமணம் என்பது ஒரு பெண்ணின் லட்சியங்களுக்கு முற்றுப்புள்ளி அல்ல என்பதையும் அழுத்தமாக எடுத்துரைக்கும் படைப்பாக ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ அமைந்துள்ளது.

வானத்தில் மின்னும் நட்சத்திரத்தைப் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அந்த நட்சத்திரமாகவே மாற வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படம் ஒரு நம்பிக்கையை விதைக்கிறது.

M.GIRIJA- CINEMA REPORTER

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here