இயக்கம்: தீரன் அருண்குமார்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
தயாரிப்பு: எம். மூர்த்தி
நடிகர்கள்: வெற்றி, லிவிங்ஸ்டன், பிரியாலயா, அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், அருள் டி. சங்கர் மற்றும் பலர்.
 
தமிழ் சினிமாவில் தங்கம், வைரம், போதைப்பொருள் கடத்தல் எனப் பல்வேறு கதைக்களங்களில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மனித முடி வியாபாரத்தின் பின்னணியில்பொதுவாக நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் தலைமுடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வியாபாரம் இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது BLOCK GOLD திரைப்படம்.
 
கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடி சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் இயங்கும் குழுக்கள், அவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டி, அதிகாரப் போட்டி, பணத்திற்காக அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் எனக் கதை நகர்கிறது.
 
பல கோடி மதிப்புள்ள தலைமுடியை ஏற்றிச் செல்லும் வேன் மர்மமான முறையில் காணாமல் போகிறது. அந்த வேனை ஓட்டிச் சென்ற லிவிங்ஸ்டனும் காணாமல் போகிறார். தனது தந்தையைத் தேடி மகன் வெற்றி மேற்கொள்ளும் பயணமே படத்தின் முக்கியக் கதைக்களம். இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? கடத்தலுக்குக் காரணம் யார்? என்பதற்கான பதில்களைப் பரபரப்புடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
 
வெற்றி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற அமைதியான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாகத் தந்தைக்காகப் போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். லிவிங்ஸ்டன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் தந்தை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அருள் டி. சங்கரின் வில்லத்தனமும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
 
பிரியாலயா காதல் காட்சிகளில் இடம்பெற்றாலும், அவருக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. அபிராமி வெங்கடாச்சலம் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
 
 பலம்: 
•வித்தியாசமான கதைக்களம்.
 பலவீனம்:
• இன்னும் வலுவான கிளைமாக்ஸ் அமைந்திருக்கலாம்.
 
இறுதி தீர்ப்பு:
பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்என்றாலும்,தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலைமுடி வியாபாரத்தை மையமாகக் கொண்டு புதிய கதைக்களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் BLOCK GOLD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here