புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரின் மகிமை, பக்தர்கள் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை அழகாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லும் படம் ‘அனந்தா’.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆன்மிக அனுபவம் சொல்லும் இந்த படத்தை இயக்கியுள்ளார். 5 பக்தர்கள் தங்கள் வாழ்வில் சத்ய சாய்பாபாவால் நடந்த அற்புதங்களை, அவர் ஆசியால் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை விவரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலதிபரான ஜெகபதி பாபு, பிஸினஸ், பணம், ஓய்வில்லாமல் உழைப்பு என வேறு உலகில் இருக்கிறார்.
அப்போது அவர் பகவான் அருளால் உண்மையான பக்தி பாதைக்கு மாறுகிறார். வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொண்டு, ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிலரை எப்படி மாற்றுகிறார். பாசிட்டிவ் சிந்தனை என ஒருவித பரவச நிலை திரைக்கதையாக சென்று இருக்கிறது. கேரக்டர் வடிவமைப்பு, நடிப்பு, என்று சாய்பாபாவின் அருளைப் பற்றி 5 கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சத்ய சாய்பாபா சீடர்கள் எப்படி துன்பங்களின் மூலம் தெய்வீக சக்தியை கண்டறிகிறார்கள் என்பதை குறிப்பாக புட்டபர்த்தி யைப் பற்றி அறியாத பார்வையாளர்களுக்கு, ‘அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்’ என்ற தத்துவத்தை சித்தரிக்கும் சத்ய சாயின் சில உண்மையான காட்சிகளை காட்டுவது நம்மை பக்தி பழமாக மாற்றுகிறது. கதையை ரொம்ப இழுக்காமல் சிறப்பாக சுருக்காக முடித்த விஷயத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவம் தெரிகிறது. படம் பார்க்கும் போது புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா நியாபகம் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருக்கும்.
மைனஸ்: கதையை இன்னும் எதார்த்தமாக கொண்டு சென்றிருக்கலாம்….. ஏழை, எளிய மக்களின் பக்தியையும் காட்டியிருக்கலாம்…..
‘அனந்தா’ சிறந்த பரவசம்.

















