விடுதலை முதல் பாகத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து புரட்சியாளரை எப்படி பிடிக்கிறார்கள்? என்பதே முதல் பாகத்தின் கதை அதன் இரண்டாம் பாகத்தில் அந்தப் புரட்சியாளர் எந்தெந்த வகையில் தன் சூழ்நிலையால் சமூகப் புரட்சியாளராக மாறுகிறார் என்பதை விவரிக்கிறது விடுதலை2 பாகம்.

படத்தின் கரு: சமூகத்தில் புரட்சியாளர் எப்படி உருவாகிறார்கள்!

பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் கடைநிலை காவலரான குமரேசனால் கைது செய்யப்படுவதோடு, முதல் பாகம் முடிந்திருந்திருக்கும். அதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை குமரேசன் படிப்பது போல் தொடங்குகிறது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம்.

முதல் பாகத்தில், மலை கிராம மக்களின் வாழ்வியலையும் தேடுதல் வேட்டை என்ற பெயரில், காவல்துறை நடத்தும் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில், பண்ணை அடிமை முறை, உழைக்கும் சமூகத்து பெண்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்கிரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மரணங்கள் என இயக்குநர் வெற்றிமாறன் பலதரப்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தை நாயகன் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.

படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல், வங்கப் போராளியாக வந்து செல்லும் அனுராக் காஷ்யப் என படத்தில் வரும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. சாதிய வர்க்க மொழி அரசியல், இடதுசாரிகளின் பங்களிப்பு என்று பொதுவுடைமை அரசியலின் தீவிரமான பக்கங்களைச் சமரசமின்றி திரையில் காட்டியிருப்பதற்குத் திரைக்கதை ஆசிரியர்கள் மணிமாறன் மற்றும் வெற்றிமாறனுக்குப் பாராட்டுகள். வளர்ச்சி என்ற பெயரில் அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தாலும், ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு தெருவோ, ஒரு ஊரோ பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்றுதான் அதை அணுக வேண்டும் என்று அரசுக்கு பாடம் புகட்டியிருப்பது சிறப்பு. வசனங்கள் எல்லாம் மனதில் பதிகிறது. 

இரண்டாம் பாதி கதையில் இன்னும் தெளிவு வேண்டும்……

இந்த விடுதலை 2- புரட்சியாளரின் வலி….

ராஜ்குமார் – சினிமா நிருபர்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here